ஞாயிறு, 19 மார்ச், 2017

குறையகராதி....


புனித நூல் போலவே 
தினமும் வாசிக்கப்படும்
கேட்கக் கட்டாயப்படுத்தப்படும்

பெரும்பாலும் இல்லை
நன்றாயில்லை
உப்பில்லை
அல்லது 
உப்பு மிகவும் அதிகம்

செய்யவில்லை
சரியாய்ச் செய்யவில்லை
சரி பார்க்கவில்லை என்றோ

அறிவில்லை
அல்லது
ச்சே....என்றோ
முடியும்

பெரும்பாலும் பதில்களை
எதிர்  நோக்காத கேள்விகளாயிருக்கும்

மீறி பதிலுறைத்தால்
அத்துமீறலாக சித்தரித்து
மேலும் ஒரு குறையகராதி
ஆரம்பிக்கப்படும்

பெரும்பாலான நேரத்தில்
இவையே வாழ்வை
ஆக்கிரமிக்க

எது சரி எது தவறு 
எனப் பிரித்துப்பார்த்து
பகுத்தறியும்
திறனும் கேட்ப்பவர்க்கு
மழுங்கடிக்கப்படும்

நாள் செல்லச் செல்ல
இதுவே வாடிக்கை ஆகி

வெந்து, நொந்து, வெறுத்து 
தப்பிக்க முயன்று 
தோற்று
வேறு வழியில்லாமல்
தாங்கித் தாங்கி
பின் ஒரு
தெளிவு பிறக்கும்

குறையகராதி
கேட்பவருடையதல்ல 
வாசிப்பவருடையது என

அதன் பின்
பார்வையாளராக இருந்து
பார்க்கும் பொறுமையும்
அமைதியும் வரும்
அதன் பின் எவ்வளவு பெரிய 
அகராதி வாசிப்பும்
சலிப்பின்றி வெறுப்பின்றி 
ரசிக்கும் அன்பு பெருகும்

குறைகாண்போர் 
வாழ்வில் உய்ய 
பிரார்த்திக்கும் பக்குவம் வரும்

மானிட வாழ்வின் இறுதி  நோக்கம் 
நிறைவேற்றப்படும்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக