புதன், 29 மார்ச், 2017

எரிபொருள்

எரிபொருள்

முடிக்கப்படாமல் இருக்கும் சொற்ப
கணக்குகளில்
வெகுச்சிலவே
உனக்கானது
குளிர்காய்ந்தே நீ தீர்த்த எரிபொருள்
விட்டுச்சென்ற
வெட்டவெளியாயிருக்கிறேன்
வெட்டவெளியை
தண்டிக்க உன்னிடம்
எந்த உத்தியுமில்லை
தீர்ந்த எரிபொருளை
நிறைக்க என்னிடம்
எந்த யோசனையும் இல்லை
உன் கங்குகளை அனைத்தே வைக்கப் பழகிக்கொள்

ஞாயிறு, 26 மார்ச், 2017

மழையுமானாய்....

புயலுக்கு பின் அமைதியோ
முன் அமைதியோ என
பதறத் தேவையின்றி
மனம் ஒரு நிலையில்
உன் அருகில்...

நெடு நாள் கனவொன்று
இன்று மெய்ப்பட
என் அருகே நீ
எல்லையில் நின்று
அமைதி காக்கிறாய்

எழுத எழுத என் பக்கங்களும்
நீள்கின்றன
என் கதைக்குள் நான்
பாத்திரங்களோடு உலவிவர
நேரம் தந்து என் அடுத்தத்
தலை நிமிரலுக்காக காத்திருக்கிறாய்

நீ கடிகாரம் பார்ப்பதை
என் கவனத்துக்கு வராமல் மறைக்கிறாய்

காற்று நிற்காமல் மெல்லியதாக
வீசுகிறது

சுற்றிலும் தண்ணீர் அலையில்
தளும்பியபடி இருளை
அரவணைக்கிறது

என் காகிதத்துக்கு வெளிச்சம் போதாமல்
நான் நிமிர
உன் கைத்தொலை பேசி
விளக்கால் ஒளியூட்டுகிறாய்

நான் மறுபடியும் எழுத ஆரம்பிக்க
உனக்குள்ளே ஏதோ பேசிக்கொண்டே
முடிவுகள் செய்து கொள்கிறாய்

ஏறக்குறைய ஒரு மணி நேரம்
என் கதையும் ஒரு உருவுக்கு வந்து விட்டது

உனக்கான என் மனப்பிரதிமைகளும்
பெருமாற்றங்களுக்கு
உள்ளாயின

அடியோடு புரட்டிப்போட்டு
உழுத நிலமாய்
வானம் பார்த்தபடி மழைக்காக
என் மனம்

சொற்ப  நேரத்தில் வீட்டை அடைய
எழுதி முடி
உணவு தயார் செய்கிறேன்
என்று அடுக்களை புகுந்த போது- நீ
மழையுமானாய்







ஞாயிறு, 19 மார்ச், 2017

குறையகராதி....


புனித நூல் போலவே 
தினமும் வாசிக்கப்படும்
கேட்கக் கட்டாயப்படுத்தப்படும்

பெரும்பாலும் இல்லை
நன்றாயில்லை
உப்பில்லை
அல்லது 
உப்பு மிகவும் அதிகம்

செய்யவில்லை
சரியாய்ச் செய்யவில்லை
சரி பார்க்கவில்லை என்றோ

அறிவில்லை
அல்லது
ச்சே....என்றோ
முடியும்

பெரும்பாலும் பதில்களை
எதிர்  நோக்காத கேள்விகளாயிருக்கும்

மீறி பதிலுறைத்தால்
அத்துமீறலாக சித்தரித்து
மேலும் ஒரு குறையகராதி
ஆரம்பிக்கப்படும்

பெரும்பாலான நேரத்தில்
இவையே வாழ்வை
ஆக்கிரமிக்க

எது சரி எது தவறு 
எனப் பிரித்துப்பார்த்து
பகுத்தறியும்
திறனும் கேட்ப்பவர்க்கு
மழுங்கடிக்கப்படும்

நாள் செல்லச் செல்ல
இதுவே வாடிக்கை ஆகி

வெந்து, நொந்து, வெறுத்து 
தப்பிக்க முயன்று 
தோற்று
வேறு வழியில்லாமல்
தாங்கித் தாங்கி
பின் ஒரு
தெளிவு பிறக்கும்

குறையகராதி
கேட்பவருடையதல்ல 
வாசிப்பவருடையது என

அதன் பின்
பார்வையாளராக இருந்து
பார்க்கும் பொறுமையும்
அமைதியும் வரும்
அதன் பின் எவ்வளவு பெரிய 
அகராதி வாசிப்பும்
சலிப்பின்றி வெறுப்பின்றி 
ரசிக்கும் அன்பு பெருகும்

குறைகாண்போர் 
வாழ்வில் உய்ய 
பிரார்த்திக்கும் பக்குவம் வரும்

மானிட வாழ்வின் இறுதி  நோக்கம் 
நிறைவேற்றப்படும்





வியாழன், 16 மார்ச், 2017

ஓசை

எங்கும் ஓசை 
எப்போதும் ஓசை
ஓசையுடனே சில நேரம் 
தாளமும் லயமும் கூட..

"ம்ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்....."
புல் வெட்டும் ஓசை

"டங்.....டங்.....டங்....."
மறு சீரமைப்பு பணி இடிக்கும் ஓசை

"டக....டக.....டக......"
தரை துளைக்கும் ஓசை

சிறிதிலிருந்து 
பெரிதுவரை ஓசை
காதுகளுக்கு 
இனிமையிலிருந்து 
துன்பம் வரை பேரோசை

ஓரு பக்க தலைவலியை 
வரவேற்க்கும் ஓசை

பகலில் கேட்ட ஓசைக்கு 
இரவு உறக்கம் தப்பிப்போதல்

சத்தம் இல்லாத தனிமை 
கேட்க தூண்டும் ஓசை

குழந்தையின் காய்ச்சல்
ஓரு வார தொடர் கண்விழிப்பு

ஜுரம் விட்ட முதல் நாள்
இப்போதும் அதே ஓசை

முன்னைக்காட்டிலும் அதிக ஓசை

பட்டபகலில் பேரோசையில் 
ஆழ்ந்த உறக்கம்....

அட இது கூட சாத்தியமா?









புதன், 8 மார்ச், 2017

வயது 14

மீன் பிடி விற்பன்னர்களின்
மீன் கொலைகளம்

மயக்கம் வரவழைக்க
பின் சென்று வரலாமென

நடந்த எனக்கு
அங்கே வரவேற்ப்பு

இருபது முதல்
நாற்பது வயதில்
மரங்கள் எல்லாம்

விகார அளவில்
மலர்களும் காய்களும்
தாங்கிச்
சிரித்துக்கொண்டிருந்தன
தொட்டிகளில்

என் வயது 14
என்றபடி
தொட்டிக்குள்ளே ஒரு ஆலமரம்

மனதை ஏதோ பிசைய
பீறிட்டுக்கொண்டு
வந்தது அழுகை எனக்கு

இங்கு எந்த உயிருக்குமே
வாழும் சுதந்திரம் இல்லையா?

அன்பு

அன்பின் உருவாய்
மனதினுள்
கருணை ஊற்று
சுரந்து நிறைய
விழிகளும் நனைய

கவிதைக்காக
சொற்கள் தேட

கொட்டுவது அனைத்தும்
நிந்தனைகள்
நிராசைகள்
நீர் மேலெழுத்துக் காவியங்கள்

எனக்குள்ளேயே
அறிவித்துக்கொள்கிறேன்
ஓர் அவசரத் தடையை

அன்பைத்தவிர
வேறதையும்
தரவிறக்கம்
செய்யாதே மனமே

பிற உயிர்கட்கு
நன்மையாய்
அன்பையே
பொழிவாய் - என்
கவிதைகளில்

படிப்பவர் மனம்
பட்டாம் பூச்சியாய்
பறக்கட்டும்



வேறென்ன இழப்பு?

இரு ஜோடி கருவிழிகள் - அதில்
தேங்கி நிற்கும் கனவுகள்

நிறைவேற்ற உதவுவது
நானாகவே இருக்கட்டும்

நானில்லா சூழலில்
குண்டுகள் தகர்க்கலாம்
ஊசிகள் குத்தலாம்
வன்சொற்கனைகள் வீசப்படலாம்
வணக்குவதற்கென வாட்டப்படலாம்

தாயில்லா உலகத்தின் 
தகிப்பு தெரியாமலே
வளரட்டும் 

அவர்களின் 
அதிகபட்ச 
பிரச்சனைகளும் பிரார்த்தனைகளும்
நல்லாயிருக்கவேண்டும் 
சாமியோடு முடிந்து விடட்டும்

உன் தினசரி சொல்
வறுவல்களையும் 
பொரியல்களையும்
நானே தாங்கிக்கொள்கிறேன்

மனமென்ற மென்பொருள்
திடப்பொருளாகி

வார்த்தை அனல் வீச்சுக்களின் 
வெப்பக்கடத்தியாகி

மின்சாரத்திற்கும் தயாராகிவிட்ட 
செப்புத்தூணாக மாறியதை தவிர

வேறென்ன இழப்பெனக்கு?











அனல் வறுமை

விசால வீடு
அதி விசால வங்கி சேமிப்பு
தொட்டதெல்லாம் வெற்றி
தேர் போல கார்

என்றும் நிரம்பிய வயிறு
மூச்சு முட்ட வாழ்க்கை

இருந்தென்ன

அனல் வறுமை உன்
புன்னகைக்கும்
அன்புக்கும்

நீ எப்படி பணக்காரன்?

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

மின்னலில் ஒரு இருள்

சிறிதாயும்
பெரிதாயும்
ஆசைச் சிற்றலைகள்
ஓய்வதாயில்லை அங்கு

சதா வளர்வதும்
தேய்வதும்
உருமாறுவதுமான
நாடகம்
தொடர்ச்சி அரங்கேற்றம்

நிறைவேறுவதோ
அல்லாததோ
ஒரு பாதிப்பை
ஏற்படுத்தியதாக
தோன்றவில்லை

நிறைவேறிய தொகுப்புகளை
திரும்பிப்பார்க்கவும்
தயங்குகிறேன்

நிறைவறியா
அந்த விந்தை வெளியில்
சோகம் கவ்விய
முகத்துடன் நிற்கிறேன்

முயற்சிகளை செய்து
ஓய்ந்து தேய்ந்திருந்தேன்

ஒவ்வொரு முறையும்
நிரப்ப முயல்வதும்
விளைவாக அதை விட
பெரிய வெளி
உருவாகி விடுவதும்
தொடர்ந்தது

எதுவுமே
நிறைக்க
போவதில்லையென்றால்
அவை நிறைவேறாமலே
இருக்கட்டும்
என்ற மின்னலை
கண்டுகொள்கிறேன்

முயற்சிகளை
நிறுத்திவிடுகிறேன்

அதன்பின் தேய்ந்தழிவேன்
என நினைத்திருந்தேன்

அலையலையாய்
வந்து அடித்தவை
எல்லாம்
அடி மண்டின

பின் கரைந்தோடின

திடீரென
சந்திரனில்
நிற்பது போல்
கனம் இலகுவாகியது

என்னை மட்டும்
பூமித்தாய் சற்று
விடுவித்தாற்போல்
தோன்றியது

இதன் வலிமை
இவ்வளவே
என எடையிட
தெரிந்து கொண்டேன்

இப்போது ஆசைகள்
என்னை ஆள்வதில்லை

தேவைகளிலிருந்து
வேறுபட்ட எவையுமே
ஆசைகளின் மாறுவேடம்

எண்ணக்குவியலோ
வேறந்த வேடமோ
எப்படி வந்தாலும்

தள்ளி நின்று
பகுத்தறிய
உதறித்தள்ள
கற்றுக்கொண்டேன்

நுணுகிப்பார்த்தால்
அவை எழுந்தாடும் சக்தி
எதிராடும்
என் சக்தியே
என புரிந்தது

இப்போது அவை
இருப்பதும்
இல்லாததும்
ஒன்று தான் என
அறிந்து

அமிழ்ந்தேன் அந்த
நிறைவிருளில்