செவ்வாய், 13 டிசம்பர், 2016

திரிபு

சில வருடங்களுக்கு முன் எப்போதும் அமைதியாகவும், சூழ்நிலைகளால் பாதிக்கபடாமல் தன் வேலையை திறனாக செய்பவர்களை பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கும். அவர்களை ஆய்ந்து பார்த்ததில், அவர்கள் தன் மனதில் வந்து விழும் உரசல்கள், வெறுப்பு விஷயங்களை, அன்பாகவும் கருணை உணர்வாகவும் மாற்றி விட கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. தங்கள் இயல்பை மாற்றிக்கொள்வதற்கு முதலில் தாங்க முடியாத துயரம் வந்து அதிலிருந்து வெளிவர தவித்து பின் இந்த கலையை கற்று கொண்டிருக்கிறார்கள். 

எப்போதுமே கோபமாகவும், டென்ஷனாகவும் பிறரை சத்தம் போட்டு மிரட்டிக்கொண்டு இருப்பவர்கள் தங்களை அறியாமல் தனக்கு வரும் துன்பங்களை, எரிச்சல்களை பிறர் மீது செலுத்துவதில் தன் துன்பம் நீங்கிவிட்டது போல் நினைக்கிறார்கள். சத்தமாக பேசி பிறரை புண்படுத்தி விட்டு தான் வெற்றி பெற்றாதாக நினைத்து நிம்மதி அடைகிறார்கள். 

பெரும்பாலும் இரண்டாவது வகை மனிதர்களுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் தான் முதல் வகை மனிதர்களாக விரைவில் மாறுகிறார்கள். 

கோபத்தை கருணையாகவும், வெறுப்பை அன்பாகவும் மாற்றும் திரிபு சாத்தியம் தான் என தெரிந்தால் சத்தமாக பேசி தன் ஆளுமையை நிலை நாட்ட பாடுபடுபவர்கள் தங்கள் நேரத்தையும், சக்தியையும் பெருமளவு மிச்சப்படுத்தி ஆக்க பூர்வமான செயலில் ஈடுபடலாம். 


வெள்ளி, 9 டிசம்பர், 2016

சக்தி உலகம்

ஒரு சாதாரன மனிதனின் ஆன்மீகத் தேடலும் அதன் பின் வாழ்க்கையும்.

கொஞ்சமாக கவலைகள் இருக்கும் போது, அவற்றின் மத்தியில் இடைவெளியும் வேலை நிமித்தமான தேவைகளும் அதிகம் இருக்கும் போது புலப்படாத ஒரு உலகம் சக்தி உலகம். 

வாழ்வின் நெருக்கடிகளும் நம்மை நம்பி வாழும் உயிர்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்ய முடியாத குற்ற உணர்வுகளும், அவற்றுக்காக காற்றில் விட்ட சொந்த கனவுகளும் அதிகரிக்க, நிறைய கேள்விகள் ஏழும் நேரம் தான் சக்தி உலகம் புலப்படும் நேரம். 

தியானம், யோகா, சக்தி நிலை பயிற்சிகள் என சுற்றி வருவோம். எதையோ சாதிக்க போகும்  நம்பிக்கையுடன் இருப்போம். ஆனால் எதுவும் மாறாது. மனம் இயங்கும் வழிகளையும், வித்தைகளையும் கற்றுக்கொள்வோம். அதன் பின்னும் எதுவும் மாறாது. பின் காண்பதெல்லாம் உன் தோற்ற மயக்கங்களோ என்ற பாடல் வரிகளுக்கு எல்லாம் சரியான அர்த்தம் புரியும். 

மன வெளிப்பாடு இல்லாத வெறும் உள்வாங்கல் மட்டுமே நம்மை மிரள வைக்கும். குழப்பத்துடனே எல்லாவற்றையும் சரியாக செய்து வருவோம். கொஞ்சம் சென்சிடிவ் ஆனது போல் தோன்றும். வாழ்க்கை முடியாத ஒரு பயணப்பாதை போல் நீண்டு இருக்கும். 

செய்யும் பயிற்சிகள் இடையிடையே சில அனுபவங்களை தரும். அவற்றின் மீது இருக்கும் ஆர்வமும் போய் எதிர்பார்ப்பை மனம் நிறுத்திவிடும். அதன் பின் எந்தவித மன ஆர்பாட்டமும் இன்றி அல்லது  அவை முக்கியத்துவம் இழந்து தலையில் எப்போதும் சுழன்று கொண்டிருந்த ஒரு புயல் நின்றது போல் அமைதி இருக்கும். அவ்வப்போது தோன்றும் சிறு சுழல்கள் நம்மை, நம் செயல்களை பாதிக்காமல் வாழ பழகிவிடும். 

இது ஒரு அக ரீதியான விடுதலை போலவே இருக்கும். அதன் பின் பார்ப்பவை அனைத்தும் சக்தி ரூபமாகவே உணர முடியும். வெளிப்படையாக எந்த மாற்றமும் நிகழவில்லை என்றாலும் அகத்தில் தெளிவை உணர முடியும். இதுவே முடிவு அல்ல என்பது போல் சில நேரம் மறுபடியும் அகப்புயல் வீசும் ஆனால் முன்பு புரட்டி போட்டது போல் அதற்கு வேகம் இருக்காது. இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்த்தால் புயலுக்கு வலு சேர்த்ததே அகத்தில் நாம் செய்த போராட்டம் தான் என்று புரியும். 

அப்புறம் நாம் தேவையானதை மட்டுமே செய்வோம். கைவல்ய பாதம் என்று பதஞ்சலி யோகத்தில் உள்ள பாத் ஆஃப் லிபரேஷன் வழிக்கு வந்து விடுவோம். வாசனைகளும், பதிவுகளும் தீரும்வரை அலை எழுந்த வண்ணமே இருக்கும். 
அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நம் வேலையில் கவனம் செய்வோம். 
இது ஒரு முடிவு போல் தோன்றினாலும் என் கண் முன் தினமும் விரிந்து கொண்டிருக்கும் பாதை. 

வெள்ளி, 14 அக்டோபர், 2016

அக ஒளி

முன்பில் வழி விழைந்து
அன்றில் அகம் இழந்து
ஐந்தும் வெளி நழுவ
நானல்லா யாவற்றிலும்
என்னைத் தேடினேன்

நூல் பல கற்று
சொல் பல கேட்டு
பயிற்சி பல செய்து
நானல்லாவற்றை 
புரிந்து கொண்டேன்

அகத்தில் 
நான் எனும் பிம்பம் 
நிதர்சனம் காட்டும்
பொய் விளக்க பிரதிமை என்னும்
மெய் விளக்கம் பதிவேற

புறத்தில் 
காண்பதெல்லாம்
கனாவாக 
இன்ப துன்பம் வலுவிழந்து

மனமெனும் மாய சுழற்சி
நித்யப் பிரவாகமானது

சுற்றிய சுழல் அகல
நிழல் வெறுமை 
நிறைந்து நின்று
நிகழில் நிலைத்தது

இவ்வழிக்கு குழப்பமே
நன்றாயிருந்ததே 
என்று எண்ண துவங்கிய 
சில காலங்களில்

அகமென்ற உள்வெளியே
அற்ற அந்த சூனியத்தில் 
நிகழ்வுகள்
தெள்ளத் தெளிவாக
சந்திக்க இலகுவாக
ஆகியிருந்ததை
மிக லேசாகிப் போயிருந்த
மன இயக்கம் விளக்கியது

எங்கோ ஓர் மூலையில்
உருவாகி முடிவில்லா
சூனியத்தின் பயணத்தில்
சதா பிரவகிக்கும் 
தானியங்கி மனதை 
தள்ளி நின்று பார்க்கும்
நானெனும் பொய் பிரதிமை

அவ்வப்போது வளர்ந்தும் 
பின் தன்னை உணர்ந்தும்
யோகமும் ஞானமும் 
ஒன்றாகி ஓளிர்கிறது