வெள்ளி, 14 அக்டோபர், 2016

அக ஒளி

முன்பில் வழி விழைந்து
அன்றில் அகம் இழந்து
ஐந்தும் வெளி நழுவ
நானல்லா யாவற்றிலும்
என்னைத் தேடினேன்

நூல் பல கற்று
சொல் பல கேட்டு
பயிற்சி பல செய்து
நானல்லாவற்றை 
புரிந்து கொண்டேன்

அகத்தில் 
நான் எனும் பிம்பம் 
நிதர்சனம் காட்டும்
பொய் விளக்க பிரதிமை என்னும்
மெய் விளக்கம் பதிவேற

புறத்தில் 
காண்பதெல்லாம்
கனாவாக 
இன்ப துன்பம் வலுவிழந்து

மனமெனும் மாய சுழற்சி
நித்யப் பிரவாகமானது

சுற்றிய சுழல் அகல
நிழல் வெறுமை 
நிறைந்து நின்று
நிகழில் நிலைத்தது

இவ்வழிக்கு குழப்பமே
நன்றாயிருந்ததே 
என்று எண்ண துவங்கிய 
சில காலங்களில்

அகமென்ற உள்வெளியே
அற்ற அந்த சூனியத்தில் 
நிகழ்வுகள்
தெள்ளத் தெளிவாக
சந்திக்க இலகுவாக
ஆகியிருந்ததை
மிக லேசாகிப் போயிருந்த
மன இயக்கம் விளக்கியது

எங்கோ ஓர் மூலையில்
உருவாகி முடிவில்லா
சூனியத்தின் பயணத்தில்
சதா பிரவகிக்கும் 
தானியங்கி மனதை 
தள்ளி நின்று பார்க்கும்
நானெனும் பொய் பிரதிமை

அவ்வப்போது வளர்ந்தும் 
பின் தன்னை உணர்ந்தும்
யோகமும் ஞானமும் 
ஒன்றாகி ஓளிர்கிறது