வெள்ளி, 9 டிசம்பர், 2016

சக்தி உலகம்

ஒரு சாதாரன மனிதனின் ஆன்மீகத் தேடலும் அதன் பின் வாழ்க்கையும்.

கொஞ்சமாக கவலைகள் இருக்கும் போது, அவற்றின் மத்தியில் இடைவெளியும் வேலை நிமித்தமான தேவைகளும் அதிகம் இருக்கும் போது புலப்படாத ஒரு உலகம் சக்தி உலகம். 

வாழ்வின் நெருக்கடிகளும் நம்மை நம்பி வாழும் உயிர்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்ய முடியாத குற்ற உணர்வுகளும், அவற்றுக்காக காற்றில் விட்ட சொந்த கனவுகளும் அதிகரிக்க, நிறைய கேள்விகள் ஏழும் நேரம் தான் சக்தி உலகம் புலப்படும் நேரம். 

தியானம், யோகா, சக்தி நிலை பயிற்சிகள் என சுற்றி வருவோம். எதையோ சாதிக்க போகும்  நம்பிக்கையுடன் இருப்போம். ஆனால் எதுவும் மாறாது. மனம் இயங்கும் வழிகளையும், வித்தைகளையும் கற்றுக்கொள்வோம். அதன் பின்னும் எதுவும் மாறாது. பின் காண்பதெல்லாம் உன் தோற்ற மயக்கங்களோ என்ற பாடல் வரிகளுக்கு எல்லாம் சரியான அர்த்தம் புரியும். 

மன வெளிப்பாடு இல்லாத வெறும் உள்வாங்கல் மட்டுமே நம்மை மிரள வைக்கும். குழப்பத்துடனே எல்லாவற்றையும் சரியாக செய்து வருவோம். கொஞ்சம் சென்சிடிவ் ஆனது போல் தோன்றும். வாழ்க்கை முடியாத ஒரு பயணப்பாதை போல் நீண்டு இருக்கும். 

செய்யும் பயிற்சிகள் இடையிடையே சில அனுபவங்களை தரும். அவற்றின் மீது இருக்கும் ஆர்வமும் போய் எதிர்பார்ப்பை மனம் நிறுத்திவிடும். அதன் பின் எந்தவித மன ஆர்பாட்டமும் இன்றி அல்லது  அவை முக்கியத்துவம் இழந்து தலையில் எப்போதும் சுழன்று கொண்டிருந்த ஒரு புயல் நின்றது போல் அமைதி இருக்கும். அவ்வப்போது தோன்றும் சிறு சுழல்கள் நம்மை, நம் செயல்களை பாதிக்காமல் வாழ பழகிவிடும். 

இது ஒரு அக ரீதியான விடுதலை போலவே இருக்கும். அதன் பின் பார்ப்பவை அனைத்தும் சக்தி ரூபமாகவே உணர முடியும். வெளிப்படையாக எந்த மாற்றமும் நிகழவில்லை என்றாலும் அகத்தில் தெளிவை உணர முடியும். இதுவே முடிவு அல்ல என்பது போல் சில நேரம் மறுபடியும் அகப்புயல் வீசும் ஆனால் முன்பு புரட்டி போட்டது போல் அதற்கு வேகம் இருக்காது. இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்த்தால் புயலுக்கு வலு சேர்த்ததே அகத்தில் நாம் செய்த போராட்டம் தான் என்று புரியும். 

அப்புறம் நாம் தேவையானதை மட்டுமே செய்வோம். கைவல்ய பாதம் என்று பதஞ்சலி யோகத்தில் உள்ள பாத் ஆஃப் லிபரேஷன் வழிக்கு வந்து விடுவோம். வாசனைகளும், பதிவுகளும் தீரும்வரை அலை எழுந்த வண்ணமே இருக்கும். 
அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நம் வேலையில் கவனம் செய்வோம். 
இது ஒரு முடிவு போல் தோன்றினாலும் என் கண் முன் தினமும் விரிந்து கொண்டிருக்கும் பாதை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக